நம் முன்னோர்கள் விளைச்சலில் அதிக லாபம் பெற்றதற்கான மரபுவழி காரணங்கள் ????

நம் வயலில் பொதுவாக எந்த பயிரினை விதைத்தாலும் அந்த பயிருடன் சேர்த்து களை செடிகளும் வளர ஆரம்பித்து விடுகிறது.

இந்த களைசெடிகள் வளராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் எனவும், அடுத்தடுத்து என்ன பயிரினை விளைவிக்கலாம் எனவும் தெரிந்துக்கொள்வோம்.

கோரை அதிகமாக வளரும் பகுதிகளில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை அடர்த்தியாக சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை.

சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்தால் மஞ்சளின் மகசூல் அதிகமாக இருக்கும்.

கம்பு விதைத்த பூமியில் வாழை நடவு செய்தால் வாழையின் மகசூல் அதிகரிக்கும்.

கம்பு சாகுபடி செய்த வயலில் கடலையும், கடலை சாகுபடி செய்த வயலில் கம்பையும் பயிரிட்டால் விளைச்சல் அதிகமாக இருக்கும்.

செயற்கை உரத்திற்கு பதிலாக பயன்படுத்தப்படும் இயற்கை உரங்கள் :

விளைநிலத்திற்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக மாட்டுகோமியத்தையும்,

டிஏபி உரத்திற்கு பதிலாக ஜீவாமிர்தம் மற்றும் அமுதகரைசலையும்,

பொட்டாஷ்க்கு பதிலாக அடுப்புசாம்பலையும்,

தழைச்சத்தை பயிருக்கு கொடுக்க கொழுஞ்சி விதைப்பையும்,

பயிர் ஊக்கிக்கு பஞ்சகாவ்யத்தையும்,

பூச்சிகொல்லிக்கு பதிலாக சிட்டுக்கு குருவி, கரிச்சாங்குருவி, காகம், தேன்சிட்டு, பல்லி, மயில் போன்றவை வயலில் அமர்வதற்கு ஏற்ற இடத்தையும் அமைத்து கொடுக்கலாம்.

பூச்சி விரட்டியாக பயன்படும் இயற்கை பொருட்கள்:

பூச்சி விரட்டியாக வேப்ப எண்ணையையும், புங்க எண்ணையையும்,

மகரந்த சேர்க்கைக்கு தேன்பூச்சிகளையும்,

பார்த்தீனியா விஷசெடியை அழிக்க நாம் உணவிற்கு பயன்படுத்தும் கல் உப்பையும் பயன்படுத்தலாம்.

ஏழு அடி ஆழத்தில் மண்ணில் இருக்கும் சத்துக்களை மேலே எடுத்து கொண்டுவர மண்புழு பயன்படுகிறது.

மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்களில் அணில்களோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்களை விரட்ட ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைத்து அதை நாலு லிட்டர் தண்ணீரில் கலந்து பழ மரத்து மேல தெளிக்க வேண்டும். இந்த பூண்டு வாசனைக்கு அணில்கள் தலை தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.

அவரையில் இருக்கும் பெரிய பிரச்சனையே, காய் துளைப்பான் நோய் தான். இதை கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெயை தெளிக்க வேண்டும்.

கொழிஞ்சியை பிடுங்கி காய் காய்க்காத தென்னை மரத்தில் பாளைகளுக்கு இடையில் வைத்தால் காய் நன்றாக பிடிக்கும்.

பயிர் நடவின் போது ஒவ்வொரு பயிருக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி விட வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியது இதுதாங்க.

நெல்லுக்குள் நண்டு ஓட பயிர் இடைவெளி இருக்க வேண்டும்.

வாழைக்குள் வண்டி ஓட பயிர் இடைவெளி இருக்க வேண்டும்.

தென்னைக்கு தேரோட பயிர் இடைவெளி இருக்க வேண்டும்.

மாட்டு உரம் மறுதாம்புக்கு பயன்படும், ஆட்டு உரம் அன்னைக்கே பயன்படும்.

தொழுஉரத்தை நீர் பாய்ச்சும் முன் போட்டு பிறகு பக்குவமான ஈரத்தில் உழவு செய்தால் கட்டிகள் குறையும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *