பிரதமர் மோடிக்கு நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு

ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த 8.03 கோடி குடும்பங்களையும், நகர்ப்புறங்களில் உள்ள 2.33 கோடி தொழிலாளர் குடும்பங்களையும் இலக்காகக்கொண்டு, அவர்கள் பயனடையும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து இரண்டாம் நிலை தாலுகா மருத்துவமனைகள், மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் மருத்துவச் சிகிச்சையைப் பெறலாம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 லட்சம் ரூபாய் வரையில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை இந்திய அரசே ஏற்கும். இந்தத் திட்டத்துக்கான செலவில் 60 சதவிகிதத்தை மத்திய அரசும், 40 சதவிகிதத்தை மாநில அரசும் பகிர்ந்துகொள்ளும். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018 செப்டம்பர் 23-ம் தேதி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இத்திட்டம் மூலம் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இது தொடர்பாக , தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். இது இரண்டு ஆண்டுகளுக்குள் நடந்துள்ளது. இந்த முயற்சி பல உயிர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன். அவர்களின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.ஒரு கோடியாவது நபராக பயன் பெற்ற பெண்ணுடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசி, விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தேன் என்று பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையை பாராட்டிய நடிகர் அமிதாப்பச்சன், இந்த மைல்கல்லை அடைந்த ஆயுஷ்மான் பாரத்திட்டத்திற்கு பல வாழ்த்துக்கள் என தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்னும், பலரும் பிரதமர் மோடியின் இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, மத்திய அரசின் தேசிய பொதுச் சுகாதார திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் நோய்களில் கொரோனா நோய் தொற்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *