மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடக்கிறது அம்பன் புயல்…

மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று பிற்பகல் முதல் மாலைக்குள் ஆம்பன் (Amphan) சூப்பர் புயல் வலுவிழந்து அதிதீவிரப் புயலாக கரையை கடக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த சனிக்கிழமை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் இது, புயலாக உருவெடுத்து, வடக்கு நோக்கி நகர்ந்தபடி உள்ளது. இது மேலும் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறியது. அதாவது மணிக்கு 230 கி.மீ வேகத்தில் காற்று வீசும் அளவுக்கு வலுவான புயலை சூப்பர் புயல் என்பார்கள். புயல், அரபிக் கடலில் இருந்து குளிர்மையான காற்றை இழுக்கிறது. எனவே, தென் கர்நாடகா, வடக்கு கேரளா, வட தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பதிவானது.

புயல் கரையை கடக்கும் இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே, ஆம்பன் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அது கூறியது. முன்னதாக, “ஆம்பன் இப்போது ஒரு ‘சூப்பர் சூறாவளி’ என்ற நிலைக்கு மாறியுள்ளது. இது ஒரு தீவிரமான புயலாகும், இந்த அளவுக்கு வலுவான ஒரே புயல் இதற்கு முன்பு ஒடிசாவில் 1999ம் ஆண்டு பதிவானது. அது மிகவும் ஆபத்தானது” என்று தேசிய பேரிடர் பதிலளிப்பு படை டி.ஜியான, எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இன்று மாலை நிலவரப்படி, ஆம்பன் சூப்பர் புயல் சற்று வலுவிழந்து அதிதீவிர புயலாக மாறியுள்ளது. கரையை நெருங்குவதால், புயலின் வேகம் குறைந்துள்ளதாம். இருப்பினும், இதுவும் லேசுப்பட்ட புயல் கிடையாது. ஒடிஷா, மேற்கு வங்க கடலோர மாவட்டங்களுக்கு மிக மிக அதிகமான கனமழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்கத்தா, ஹூக்ளி, ஹவுரா, தெற்கு-வடக்கு 24 பர்கானா, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்படுமாம்.

அம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல், மேற்குவங்கத்தில் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் கிழக்கு மெடினிபூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாஸ், அவுரா, ஹூக்ளி, மற்றும் கொல்கத்தா மாவட்டங்கள் அம்பனால் பாதிக்கப்படும். கடந்த 2019 நவம்வர் 9ம் தேதி மேற்கு வங்க கடற்கரையை தாக்கிய புல்புல் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை விட அம்பன் புயல் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *