மேற்கு வங்கத்தை சூறையாடிய ஆம்பன் புயல் ..

மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலால் கொரோனாவை விட மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மிக கடுமையான ஆம்பன் புயல் புதன்கிழமை மதியம் 2.30மணி அளவில் மேற்குவங்கதின் திகா மற்றும் வங்கதேசதின் ஹதியா தீவுகள் இடையே சுந்தரவன காடுகள் பகுதியில் கடக்க தொடங்கியது. ஒடிசாவின் பிரதீப் பகுதியை தொட்டபடி நகர்ந்தது. இதனால் பிரதிப், பாத்ரக், பாலாசோர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 160 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.

ஒடிசா மற்றும் மேற்குவங்கதின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடிசை வீடுகள் தரைமட்டம் ஆகின. மின் கம்பங்கள் சரிந்து, மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் புயல் மாலை 4 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது. இந்த புயலால் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கான, கிழக்கு மிட்னாபூர் மாவட்டங்களில் 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. சுமார் 5 மணி நேரம் கடல் அலைகள் ராட்சத உயரத்தில் எழுந்தன. இரவு 7 மணி அளவில் புயல் கரையை முழுமையாக கடந்தது.

கொல்கத்தாவை விட்டு புயல் கடந்த போது சுமார் அரை மணி நேரம் கொடூரமாக காற்று அடித்தது. இதனால் அந்த நகரத்தில் உள்ள மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன. குடிசை வீடுகள் அழிந்து போயின. சாலைகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 185 கிமீ வேகம் வரை இருந்தது.

மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலால் 10 முதல் 12 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 5,500 க்கும் மேற்பட்ட வீடுகள் ஆம்பன் புயலால் அழிந்துள்ளன. மிகப்பெரிய பேரிடர் என்றும், மேற்கு வங்கத்தில் சூறாவளி காரணமாக ரூ .1 லட்சம் கோடி மதிப்புக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்கத்தில் 5,00,000 க்கும் அதிகமானோர் மற்றும் ஒடிசாவில் 1,00,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கொல்கத்தா விமான நிலையம்

ஆம்பன் புயலால் பெய்த பேய்மழையில் கொல்கத்தா விமான நிலையம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளித்தது. கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் கொரோனாவால் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில் கார்கோ விமானமும் மீட்பு விமானமும் மட்டுமே இயக்கப்பட்டன. புயல் பாதிப்பின் போது முதல்வர் அலுவலகத்தில் இருந்த மம்தா பானர்ஜி, இது பேரழிவு என்றார்.

சீரமைப்பு பணி

மேலும் கொரோனாவை விட மிகவும் மோசமான அழிவு என்றார். தாழ்வான இடங்களில் வசித்த 5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. விமான நிலையம் முழுவதும் வெள்ள நீர் புகுந்தது. அங்குள்ள ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. இதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கார்கள் சேதம்

மேற்கு வங்கத்தில் ஹவுரா பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட கார்கள் சேதமடைந்தன. கார்களின் கதவுகளின் கைப்பிடிகளுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் கார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *