உள்நாட்டு விமான சேவையை தொடர்ந்து தனிநபர் விமானம், ஹெலிகாப்டர்கள் இயக்க மத்திய அரசு அனுமதி

தனியார் ஜெட் விமானங்கள், சார்ட்டட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை உள்நாட்டு வழித்தடங்களில் மீண்டும் செயல்பட சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதித்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 25 முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள், தனிநபர் விமானங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் சேவை தொடங்கப்படும் என கடந்த 21ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் சர்வதேச விமான போக்குவரத்து இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது, இதையடுத்து நாடு முழுவதும் நேற்று முதல் மீண்டும் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது.

இந்நிலையில், தனிநபர் விமானம், ஹெலிகாப்டரை இயக்க மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் தங்கள் சொந்த பணத்திற்காக சொந்த விமானம், ஹெலிகாப்டர் வைத்துள்ளனர். தற்போது, அவர்கள் தங்கள் சொந்த விமானத்தில் பயணம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு முன்னதாக விமான நிலையம், ஹெலிபோர்ட் அல்லது ஹெலிபேடில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். மிகவும் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலப் பிரச்சினைகள் உள்ள பயணிகள் போன்ற பாதிப்புக்குள்ளானவர்கள் விமானப் பயணத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், இது விமான ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு பொருந்தாது. சார்ட்டட் விமான பயணிக்கான போர்டிங் பாஸ், ஹெலிபேட் அல்லது ஹெலிபோர்ட்டில் வழங்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சுத்திகரிப்பு நெறிமுறைகளையும் அவர் பின்பற்ற வேண்டும். உள்நாட்டு பயணிகள் விமானங்களுக்கு சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் கடந்த வாரம் பிறப்பித்த கட்டண உச்சவரம்பு சார்ட்டட் விமானங்களுக்கு, பொருந்தாது என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *