ரேஷன் கடையை பந்தாடிய ‘அரிக்கொம்பன்’ யானை

ரேஷன் கடையை உடைத்து, அரிசியை காலி செய்த ஒற்றை யானையால் மக்கள் பீதியில் உள்ளனர். கேரள மாநிலம், மூணாறு அருகே ஆனையிறங்கல் அணைப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் நிறைய உள்ளன. இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புகளில் கடந்தாண்டு புகுந்த ‘அரிக்கொம்பன்’ என்னும் ஒற்றை யானை பல உயிர்களை காவு வாங்கியது. அதன் பிறகு நீண்ட காலமாக குடியிருப்பு பகுதிக்குள் வராத ‘அரிக்கொம்பன்’ யானை நேற்று முன்தினம் இரவு திடீரென தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. அங்கிருந்த கட்சி கொடிகம்பகளை உடைத்தது தள்ளியது.

அருகிலிருந்த ரேஷன் கடையின் முன்புற பகுதியை இடித்து தள்ளிய யானை, உள்ளே நுழைய முயன்றது. ஆனால் முடியவில்லை. பின்னர் ரேஷன் கடையின் பின்பகுதி சுவரை இடித்து, உள்ளே வைத்திருந்த அரிசி மூட்டையை காலி செய்தது. யானையின் சத்தத்தை கேட்டு, தொழிலாளர்கள் அதை துரத்த முயன்றனர். அரிசியை உண்ட யானை அணையில் தண்ணீரை குடித்துவிட்டு, காட்டுப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர். சுமார் 3 மணிநேரம் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் இந்த யானை சுற்றித் திரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தூங்கிய ஊழியர் தப்பினார்

ரேஷன் கடையில் யானை புகுந்த சமயத்தில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊழியர் சத்தம் போடாமல் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினார். யானை சென்ற பின், தொழிலாளர்கள் அவரை மீட்டனர். அரிசியை விரும்பி உண்ணும் இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் ‘அரிக்கொம்பன்’ என பெயர் சூட்டி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *