சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான முதுபெரும் அரசியல் தலைவர் அஜித் ஜோகி (வயது 74) உடல்நலக் குறைவால் காலமானார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2000-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலாவது முதல்வராக பதவி வகித்தவர் அஜித் ஜோகி.
ராய்ப்பூர் ஐஐடியில் பேராசிரியராகவும் 1980களில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகவும் பணியாற்றியவர் அஜித் ஜோகி. பின்னர் ராஜீவ் காந்தியால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர். காங்கிரஸ் கட்சியின் பழங்குடி இன தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். சத்தீஸ்கர் மாநில அரசியலின் பிரதான முகமாக திகழ்ந்தவர் அஜித் ஜோகி. சத்தீஸ்கர் முதல்வராக 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ., எம்.பியாக பல முறை பதவி வகித்தவர். ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்தார் அஜித் ஜோகி.
2016-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜெ) தனி கட்சியையும் அஜித் ஜோகி தொடங்கினார். அண்மையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அஜித் ஜோகி ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்ததாக அவரது மகன் அமித் ஜோகி அறிவித்திருக்கிறார். அஜித் ஜோகியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.