விவசாயின் 13 வருட போராட்டம், இறுதியில் ”தமக்கு தாமே” பாதை ஏற்படுத்தி வெற்றி

கேரளாவின் அதிகமான பகுதிகள் மலைகளால் சூழப்பட்டதுதான் , இதேபோல் கோழிக்கோடு மாவட்டம் கூடராஞ்சியில் மலைபாங்கான பகுதியில் உள்ள வீட்டிற்கு தந்தையும் மகனும் உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு தமக்கு தாமே சொந்தமாக பாதை அமைத்திருக்கிறார்கள்.

விவசாயி அகஸ்டினும் அவரது மகன் ஜோசப்பும் ஊரடங்கு காலத்தில் தினமும் 10 மணி நேரம் உழைத்து கரடு முரடான பகுதியை சீரமைத்து வீட்டிற்கு வழி அமைத்துள்ளனர். தங்கள் வீட்டிற்கு பாதை ஏற்படுத்தித் தரக்கோரி 13 ஆண்டுகளுக்கு முன்பே, விவசாயி அகஸ்டின் தனது 14 சென்ட் நிலத்தை கூடராஞ்சி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லாததால் ”தமக்கு தாமே” என களமிறங்கி வெற்றி கண்டுள்ளார்.

தங்கள் வீட்டில் இருந்து சாலையை அடைவதற்கான பாதை மிகவும் கரடு முரடாக இருந்ததால் அதனை சீரமைத்து கொடுக்கக்கோரி கூடராஞ்சி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்திருக்கிறார். வெறும் கோரிக்கை மட்டும் வைக்காமல் சாலை அமைத்துக் கொடுப்பதற்காக தனது நிலத்தில் 14 சென்ட் வரை கொடுத்திருக்கிறார். இதன் மூலம் அவர் மட்டுமல்லாமல் இன்னும் பல குடும்பங்கள் பயன்பெறும் என்ற நல்ல எண்ணத்தில் இதை செய்திருக்கிறார்.

ஆனால் விவசாயி அகஸ்டின் எதிர்பார்த்தது போல் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் சாலை அமைத்துக் கொடுக்கவில்லை. அதற்கு பல்வேறு காரணங்களை கூறி அவர்கள் தட்டிக்கழித்துள்ளனர். இதனிடையே 13 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இனியும் பஞ்சாயத்து நிர்வாகத்தை நம்பி பயனில்லை எனக் கருதிய அகஸ்டின், தாங்களே சாலை அமைத்துக்கொள்வதாகவும் அதற்கு அனுமதி தருமாறும் கேட்டிருக்கிறார். இதற்கு அனுமதி கிடைத்த நிலையில், யாரையும் எதிர்பார்க்காமல் தனது மகனை துணைக்கு அழைத்துக்கொண்டு பணியை தொடங்கினார் அகஸ்டின்.

ஊரடங்கு காலம் என்பதால் அகஸ்டின் மகன் ஜோஸப் வெளியில் எங்கும் செல்லவில்லை. இந்த சூழலில் தனது நேரத்தை பயனுள்ளதாக கருதிய ஜோசப் தனது தந்தை அகஸ்டினுக்கு உதவியாக இருந்துள்ளார். தந்தையும் மகனும் தினமும் 10 மணி நேரம் கடுமையாக உழைத்து இப்போது 200 மீட்டர் தூரத்திற்கு மண் சாலை அமைத்திருக்கிறார்கள். அதிகாரிகளை நம்பி பயனில்லை என்று ”தமக்கு தாமே” இந்த பணியை அவர்கள் இருவரும் செய்து முடித்துள்ளனர்.

தந்தையும், மகனும் செய்துள்ள இந்த பணியை கூடராஞ்சி கிராமமக்கள் மட்டுமல்லாமல் அனைவரும் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *