புதுச்சேரியில் சுற்றுலா தலங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் அருண் அனுமதி

புதுச்சேரியில் சுற்றுலா தலங்களை திறக்க புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் அனுமதி வழங்கியுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணிய வேண்டும். இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் மூலமே, இந்நோய் பரவி வருகிறது. புதுச்சேரியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சில நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறோம். கடற்கரை சாலையும், பூங்காக்களும் திறக்கப்பட்டுள்ளன. இனி நோணாங்குப்பம் படகு குழாம், தாவரவியல் பூங்கா, மியூசியம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்களும் இயங்கும். ஆனால் அங்கெல்லாம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

மதுக்கடைகள் இரவு 7 மணிக்கு கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மற்ற கடைகள் 8 மணி வரை திறந்திருக்கலாம். உணவகங்கள் 9 மணி வரை திறந்திருக்கலாம். அங்கெல்லாம் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும்.

நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும் மார்க்கெட், பெரிய மார்க்கெட் பகுதியிலேயே இயங்கும். கடற்கரை சாலை நடைபயிற்சிக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இங்கு கூட்டம் கூடக்கூடாது. நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.

10 வயதுக்குள் உள்ள சிறுவர்களும், 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களும் வெளியில் வர வேண்டாம். அதேபோல ஆஸ்துமா, சர்க்கரை நோய் உள்ளவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *