பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி கணக்கு முறை

பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி பற்றி அறிவீரா????

ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல, அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஒருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர்.

அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள்.

மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

”பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.

”அடைமழை” – ஐப்பசியில் பெய்வது

”கனமழை” – கார்த்திகையில் பெய்வது..

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாறாநீர் என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.

“கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி”

இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார் பழ.கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்

“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு”

எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

ஒருஉழவுமழை :

‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.

பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *