பிரம்மா, விஷ்ணு, சிவன் மூலவர்களாக வீற்றிருக்கும் திருமூர்த்திமலை

அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், திருமூர்த்திமலை, தமிழ்நாடு

மூலவர்: பிரம்மா, விஷ்ணு, சிவன்
சிவபெருமானின் திருநாமங்கள்: அமணலிங்கேஸ்வரர், திருமூர்த்தி ஆண்டவர், மும்மூர்த்தி ஆண்டவர்
தலவிநாயகர்: அழகிய கணபதி (சுந்தர கணபதி)
தலமரம்: அரச மரம்
தீர்த்தம்: தோணி ஆறு

சிறப்பு:

 1. குடவரை கோவில். அதாவது, பாறையை குடைந்து அமைக்கப்பட்ட திருக்கோயில்.
 2. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சுயம்பு என்பது சிறப்பு.
 3. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் உற்சவர் உண்டு.

ஊர் : திருமூர்த்திமலை, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

பயணவழிகாட்டல்:

 1. கோவையிலிருந்து சுமார் 78.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
 2. திருப்பூரிலிருந்து சுமார் 82.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
 3. பழனியிலிருந்து சுமார் 47.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தலவரலாறு:

திருக்கோயிலுக்கு இரண்டு தலவரலாறுகள் உள்ளன. ஒன்று அத்ரி முனிவர் மற்றும் அவரது இல்லாளான அனுசுயா தேவியோடு தொடர்புடையது. மற்றொன்று அகத்திய முனிவருடன் தொடர்புடையது.

கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயிலுக்கும், கோவை மாவட்டத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கும் ஒரே தலவரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அனுசுயா தேவியின் கற்பை சோதிக்க வந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை, தன் கற்பின் மகிமையால் அனுசுயா தேவி குழந்தைகளாக மாற்றிய திருத்தலம்.

கயிலையில் நடைபெற்ற சிவபெருமான் பார்வதிதேவி திருமணத்தை காண தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் குவியத் துவங்கினர். அப்போது, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. இருகோடுகளையும் சமன் செய்ய தன்னை போன்ற ஒருவரால் மட்டுமே முடியும் எனக் கூறிய சிவபெருமான், அகத்திய முனிவரை தென்னகம் நோக்கி செல்ல பணித்தார். தென்னகம் நோக்கி பயணித்த அகத்திய முனிவர் பலதலங்களில் தங்கி தவத்தில் ஈடுபட்டவாறு சென்றார். சிவபெருமான் பார்வதிதேவி திருமணத்தை தென்னகத்தில் உள்ள பொதிகைமலையில் இருந்தபடியே கண்டு கழித்தார் அகத்திய முனிவர். ஒருமுறை திருமூர்த்திமலை வந்த அகத்திய முனிவர், இறைவனின் திருமணத்தை மீண்டும் காண ஆவல் கொண்டார். அவரது ஆவலை நிறைவேற்றினார் சிவபெருமான். சிவபெருமான் பார்வதிதேவி திருமணத்தை இரண்டாம் முறையாக திருமூர்த்திமலையில் அகத்திய முனிவர் கண்டு கழித்த காரணத்தால், இம்மலை “தென் கைலாயம்” என போற்றப்படுகிறது.

தலபெருமைகள்:

 1. மும்மூர்த்திகளான சிவபெருமான், பெருமாள், மற்றும் பிரம்ம தேவர் என அனைவருமே சுயம்பு மூர்த்திகளாக அருள்புரிகின்றனர். மும்மூர்த்திகளுக்கும் உற்சவ மூர்த்திகள் உண்டு.
 2. இத்தலத்தில் மும்மூர்த்திகளின் மீது சந்தனத்தை எறிந்து பக்தர்கள் வழிபடுவதைக் காணலாம். அவ்வாறு எறியப்படும் சந்தனம் மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
 3. இத்தலத்தில் சிவபெருமான் ஞான குருவாகவும் அருள்புரிகிறார். எனவே, இங்கு தென்முகக்கடவுள் (தட்சிணாமூர்த்தி) வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது.
 4. அத்ரி முனிவரும் அனுசுயா தேவியும் தவம் இயற்றிய திருத்தலம். அனுதினமும் அவர்கள் தங்கள் திருக்கரங்களால் பூஜை செய்த ஐந்து லிங்கங்களை திருமூர்த்திமலையில் இன்றும் நாம் காணலாம். இன்றும் அவ்விருவரும் அனுதினமும் இவ்விடம் வந்து ஐந்து லிங்கங்களை வழிபடுவதாக ஐதீகம்.
 5. திருக்கோயில் வளாகத்திலுள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் வந்து தங்கியதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளாக அவர்கள் விளையாடிய தலமும் இதுவே. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், மலைமீதிருந்து பாறை ஒன்று உருண்டோடி வந்தது. குழந்தைகளைக் காக்கும் பொருட்டு, தேவகன்னிகைகளான பட்டாரசி, தேவகன்னி, பத்ம கன்னி, சிந்து கன்னி, அகஜா கன்னி, வன கன்னி, சுமதி கன்னி ஆகிய எழுவர் விராலி மஞ்சளை வைத்து பாறையை தடுத்து நிறுத்தினர். உருண்டு வந்த பாறையிலேயே மும்மூர்த்திகளும் தேவகன்னிகைகளும் ஐக்கியமானார்கள்.
 6. திருமூர்த்திமலையின் அடிவாரத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது. அமணன் என்றால் குற்றமற்றவன் அல்லது அழகன் என்று பொருள். குற்றமற்ற அழகனாக அருள்புரியும் சிவபெருமான், இத்தலத்தில், அமணலிங்கேஸ்வரர் என்று போற்றப்படுகிறார்.
 7. ஒரு காலகட்டத்தில் இங்கு சமணர்கள் வாழ்துள்ளதாக தெரிகிறது. சமணலிங்கேஸ்வரர் என்ற சொல்லே அமணலிங்கேஸ்வரர் என்று மாறி இருக்கலாம் என்ற கருதும் நிலவுகிறது. இருப்பினும், சிவபெருமானை வழிபாடும் வழக்கம் சமண மதத்தில் இல்லை. ஒருவேளை சமணர்கள் சிவபெருமானை இவ்விடத்தில் வணங்கி இருப்பார்கள் எனில், அமணலிங்கேஸ்வரர் என்ற பெயரை சமணலிங்கேஸ்வரர் என மாற்றி இருக்க வாய்ப்புள்ளது. பிற்காலத்தில் வாழ்ந்த மக்கள் மீண்டும் சமணலிங்கேஸ்வரர் என்ற பெயரை அமணலிங்கேஸ்வரர் என மாற்றி இருக்கலாம். ஆதியிலிருந்து அமணலிங்கேஸ்வரர் என்ற திருநாமமே வழக்கில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், அமணலிங்கேஸ்வரர் என்ற திருநாமம் திருமூர்த்திமலையை சுற்றியுள்ள பல ஊர்களில் உறையும் சிவபெருமானின் திருநாமமாக இன்றுவரை உள்ளது.
 8. அமணலிங்கேஸ்வரர் எப்போதும் நீரினால் சூழப்பட்டிருக்கிறார் என்பது சிறப்பு.
 9. திருக்கோயில் முன்பு 30 அடி உயரமுள்ள தீபக்கம்பம் காணப்படுகிறது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த தீபக்கம்பத்தின் அடிபாகத்தில் எட்டு திசைகளை நோக்கியவாறு பத்ரகாளி, வனதுர்கா தேவி, விசாலாட்சி, ஊர்த்துவ தாண்டவர், அகோர வீரபத்ரர், இராமாவதாரம், நரசிம்ம அவதாரம், மற்றும் வேணுகோபாலன் சிற்பங்கள் காணப்படுகின்றன. தீபக்கம்பத்தை கொங்குநாட்டு தலங்களில் மட்டுமே காண முடியும்.
 10. அத்ரி முனிவரும் அனுசுயா தேவியும் வழிபட்டு வந்த ஐந்து லிங்கங்களை திருமூர்த்திமலைக்கு வந்த அகத்திய முனிவரும் வழிபட்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *