வைகாசி விசாகம் என்றால் என்ன ?

சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து அக்னிப்பிழம்பாய் தோன்றியவர் ஆறுமுகப் பெருமான். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். ‘வி’ என்றால் பட்சி (மயில்) என்றும், ‘சாகன்’ என்றால் பயணம் செய்பவர், அதாவது மயில் மீது பயணம் செய்வதால் விசாகன் என்றும் அழைக்கப்படுகிறார் முருகர்.
வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திர நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். வல்வினைகள் அகலும். வளமான வாழ்க்கை மலரும். நல்ல உத்தியோகம் அமையும். ஈடுபடும் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
இந்த ஆண்டு வைகாசி விசாகம், வைகாசி 22ஆம் தேதி வியாழக்கிழமை ஜூன் 4ஆம் தேதியன்று வருகிறது.
முன் வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப் பெருமானை முருகன் அவதரித்த தினத்தில் விரதமிருந்து வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர். கொரோனா பேரிடரிலிருந்து விடுபட குமரன் திருப்பாதங்களில் சரணடைவோம்.