பிரதோஷம் என்றால் என்ன?

“தோஷம்” என்பது “குற்றம்” என்ற வார்த்தையை குறிக்கின்றது. பிரதோஷம் என்றால் குற்றம் இல்லாத வாழ்க்கை என்பதை குறிக்கும். குற்றமற்ற இந்த பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டால் நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது தான் இதன் பொருள். இரவும் பகலும் சந்திக்கும் காலத்தை தான் ‘உஷத் காலம்’ என்று கூறுவார்கள். இந்த சமயத்தில் அதிதேவதையான உஷாதேவி சூரியனின் மனைவியாக இருப்பாள்.
இதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் காலத்தில் பிரதியுஷா மனைவியாக இருப்பாள். இந்த நேரம் பிரத்யுஷத் காலம் என்று கூறப்படுகிறது. பிரத்யுஷத் காலம் என்று கூறப்பட்ட இந்த காலம் பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் என்று மாறிவிட்டது.
பிரதோஷ மந்திரம்
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ
இம்மந்திரத்தை சிவபெருமானுக்குரிய பிரதோஷ தினமான இன்று பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று வழிபட இயலாத நிலையால் வீட்டில் பூஜையரையில் உள்ள சிவபெருமான் நந்தி தேவருக்கு படத்தின் முன்பு அருகம்புல் சமர்ப்பித்து, செவ்வரளி பூக்கள் சாற்றி சிவ பெருமானுக்கு தீபாராதனை காட்டும் போது 9 முறை அல்லது 11 முறை கூறி வழிபட, பிற மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு நீங்கள் உங்களை அறியாமல் செய்த தீங்கினால் அவர்களால் உங்களுக்கு மனதளவில் கொடுக்கப்பட்ட சாபங்கள் நீங்கும்.
நந்தி ஸ்லோகம்
நந்திகேசி மஹாயாக சிவதயா நபராயண கௌரீ சங்கரஸேவர்த்தம் அனுக்ராம் தாதுமாஹஸ
சிவனின் வாகனமும், சிறந்த ஞானியும் ஆன நந்தி பகவானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த நந்தி பகவானை மனதார வேண்டி இந்த ஸ்லோகத்தை 9 முறை துதித்த பின்பு சிவபெருமான் மற்றும் பார்வதியை வணங்குவதால் நமது மனதில் இருக்கும் தீமையானவை அனைத்தும் நீங்கி, நமது கோரிக்கைகள், நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற அருள்புரிவார் நந்தி பகவான்.
இந்தப் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை நாம் வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் இன்னல்களானது தீரும் என்பது நம்பிக்கை. நம்பிக்கையுடன் தற்போது நம்மை அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற கொடிய வைரசிடமிருந்து நம்மை காத்திடவேண்டும் என்று வேண்டிடுவோம்.நாம் வேண்டும் வேண்டுதல்கள் யாவும் விரைவாக பலிக்கும் என்பது நம்பிக்கை.
இந்தப் பிரதோஷ சமயத்தில் ஒருமுறை நமது குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் சேர்த்து வழிபடுவதும் நல்லது. தனித்தே இருப்போம். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
பிரதோஷ தினத்தில் தான் ஈசன், ஆலகால விஷத்தை உண்டு இந்த அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகிறது.
சிவாயநமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயமொருநாளும் இல்லை
பிரதோஷ நாயகனே உலகின் முதல்வனே பிற தோஷங்களிலிருந்து அனைவரையும் காத்து அருள்வாய் .