வைகாசி விசாகம் ஸ்பெஷல்

“வைகாசி விசாகம் நம்மாழ்வார் திருநக்ஷத்திரம். “
வைகாசி விசாகத்திற்குண்டோ ஒப்பொரு நாள் !!
திருக்குறுங்குடி நம்பியிடம் பிள்ளைவரம் பெற்ற காரிமாறன், உடையநங்கை தம்பதியருக்குத் திருமகனாய்
வைகாசித் திங்கள் ,விசாக நட்சத்திரத்தில், திருக்குருகூரில் அவதரித்தார்!
ஆதிபிரானின் திருக்கோயிலில், ஆதிசேஷன் அம்சமாய் தோன்றியிருந்த திருப்புளியின் பொந்தினில் பதினாறு ஆண்டுகள் தவநிலையில் அமர்ந்திருந்தார். வைனதேயனின் அம்சமாய் தோன்றியிருந்த மதுரகவியாரின் குரலுக்கு செவிமடுத்து கண்மலர்ந்து அவர் கேட்ட சூட்சம வினாவிற்கு விடையளித்து அவர் ப்ரார்தனைக்கிணங்க, அவரைத்தம் சீடராய் ஏற்றார் பூமிதொடும்போதே ‘சட’ என்னும் வாயுதனை தன் காலால் எத்தி உதறி “சடகோபன்” என பெயர் பெற்றார்.
திவ்யதேசத்து எம்பிரான்களை தம் யோக நிலையிலிருந்தவாறே கண்டுகளித்து, அவர்களை பாசுரங்களால் பாடி மகிழ்ந்திருந்தார். ஆழ்வார் பணித்த பாசுரங்கள் அனைத்தினையும் பட்டோலைப்படுத்தி அவற்றை அவனியெங்கும் பரப்பினார் மதுரகவியார்!
ரிக் வேத த்தின் சாரமாய் நூறு பாசுரங்கள் கொண்ட திருவிருத்தம்
யஜுர் வேத த்தின் சாரமாய் ஏழு பாசுரங்கள் கொண்ட திருவாசிரியம்
அதர்வண வேத த்தின் சாரமாய் எண்பத்தியேழு பாசுரங்கள் கொண்ட பெரியதிருவந்தாதி
சாம வேதத்தின் சாரமாய் ஆயிரத்தி நூற்றிரண்டு பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழி
என்ற நான்கு தமிழ் ப்ரபந்ங்களை நான்கு வேதங்களுக்கொப்பாக பணித்து “வேதம் தமிழ் செய்த மாறன்” என பெருமைப்பட வழங்கப்பட்டார்!
“நம்ஆழ்வார்” என அரங்கனால் உகப்பாய் கூறப்பட்ட ஆழ்வார் பெருமாளின் திருவடிநிலையாய் இருந்து ’ஶ்ரீசடாரியாய்’ நம்மனைவருக்கும் ஞானம் அளித்து நம் துயர் அறுக்கும் சுடரடியாய் அருள்பாலிக்கிறார்!
அரங்கனின் ஆணைக்கிணங்க, கம்பநாட்டாழ்வார் “சடகோபன் அந்தாதி” என்ற நூலைப்பணித்துஆழ்வாரின் பெருமையைப்பரக்கக் கூறுகிறார்!
“நளிர்மதி சடையனும் நான்முக கடவுளும்
தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும், யாவரும் அகப்பட
நிலம்,நீர்,தீ,கால், இரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடு இன்றி, முழுவதும்
அகப்பட கரந்து, ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெருமா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே?” என்றும்
“நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன்
வேத மயன்
காரணம் கிரியைகள் கருமம் இவை
முதல்வன் எந்தை
சீர் அணங்கு அமர ர் பறர் பலரும் தொழுது
ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த
பிரான் மாதவனே” என்றும்
வேதம் உரைக்கும் பரம்பொருள்
நாரணனே என்று தம் பாசுரங்கள் மூலம் ஸ்தாபிக்கிறார் ஆழ்வார்
“கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாம ம்
திண்ணம் நாரணமே”
“நாடீர் நாடோறும்
வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாம ம்
வீடே பெறலாமே” என்று
அவனளித்த ஞானம் கொண்டு
அவனை பக்தி செய்து
அவன் சரணாரவிந்தங்களில் ப்ரபத்தி செய்யுங்கோள்!!
பரம பதம் திண்ணம்!!
என்பதனை தம் ப்ரபந்தங்களால் ஆழ்வார் அறுதியிடுகிறார்!!
ஆழ்வார் ,தாமிரபரணி ஆற்றுநீரை காய்ச்ச அறிவுறுத்தி , மதுரகவியார் மூலம், தம் விக்ரக மூர்த்தியையும் பவிஷ்யாசார்யார் யதிராசரின் விக்ரகமூர்த்தியையும் செய்வித்து, பின்னாளில் நாதமுனிகளாரிடம், ஜகதாசார்யார் யதிராசரின் விக்ரகத்தை பிரசாதித்ததாய் அறியப்படுகிறோம்.
திவ்யதேசத்து எம்பிரான்களை அனுபவித்தவாறு,இப்பூவுலகில் முப்பதியாறு அகவைகள் வாழ்ந்திருந்து, காளமேகப்பெருமாளை வழித்துணைப் பெருமானாய்க் கொண்டு, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ,அந்தமில்லா பேரின்பவீட்டை அடைந்தார்!
வைகாசி விசாகம் உதித்த ஆழ்வார் திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடுவோம்!
ஆழ்வார் திருவடிகளே சரணம்!!