அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி ரத்து.. ஐடி விங் 4 மண்டலங்களாகப் பிரிப்பு!

அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பொறுப்புகளை ரத்து செய்வது குறித்து நீண்ட காலமாகவே யோசித்து வந்த தலைமை இன்று அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து ஊராட்சிக் கழக செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரின் பதவிகள் ஒரே நேரத்தில் பறிக்கப்பட்டுள்ளன.

அதே போல் ஐடி விங் கூண்டோடு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ஐடி விங் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டல செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மண்டலங்களாக ஐடி விங் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மண்டல செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன், வேலூர் மண்டல செயலாளர் கோவை சத்யன், கோவை மண்டல செயலாளர் ஜி. ராமச்சந்திரன், மதுரை மண்டல செயலாளர் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அஸ்பயர் சுவாமிநாதன், ராமச்சந்திரன் இருவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், வி.வி.ஆர். ராஜ் சத்யன் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்.

சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மதுரை மண்டலத்திலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் கோவை மண்டலத்திலும் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை பணியாற்றி வந்த ஐடி விங் நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டு உள்ளது. மண்டல செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை நிர்வாகிகள் கூடிய விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *