பல வருடமாக வாலாட்டிய புல்லட் தாதா மகேஸ்வரி .. அலேக்காக தூக்கிய போலீஸ்!

மகேஸ்வரியை பொறுத்தவரை அந்த ஊர் தாதா போலதான் செயல்பட்டு வந்திருக்கிறார்.. பெரிய புல்லட், பைக்கில்தான் ஊருக்குள் ரவுண்டு அடித்து வருவராம்.. யாராவது தன்னை பற்றி புகார் தந்துவிட்டால், மகேஸ்வரி அவர்களை இழுத்து போட்டு உதைத்துவிடுவாராம்.. ஏன் கைது செய்ய வரும் போலீஸ் அதிகாரியின் கையை கடித்து விடுவது, பெண் போலீஸின் கையை முறுக்கி விடுவது என ரவுடித்தனம் செய்து வந்துள்ளார் மகேஸ்வரி என்ற சாராய வியாபாரி!

ஊருக்குள் புல்லட்டில் வலம் வந்து குட்டி தாதா போல ஊரையே கலக்கி கொண்டிருந்த மகேஸ்வரி, இப்போது போலீசாரின் தீவிர விசாரணை பிடியில் சிக்கி உள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த தம்பதி சீனிவாசன் – மகேஸ்வரி.. சீனிவாசனுக்கு 44 வயசு.. மகேஸ்வரிக்கு 40 வயசு. இந்த ஜோடி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள்.

சாராயம் காய்ச்சுவதில் மகேஸ்வரிதான் ரொம்ப திறமையானவர் என்கிறார்கள்.. ரொம்ப வருஷமாகவே இந்த தம்பதிக்கு இது தான் வேலை.. சில வருடங்களுக்கு முன்பு மகேஸ்வரியை குண்டர் சட்டத்திலும் போலீசார் கைது செய்திருந்தனர். ஜெயிலில் இருந்து வெளியே வந்த மகேஸ்வரி மீண்டும் சாராயம் காய்ச்ச ஆரம்பித்தார்.. இவர் சாராயம் காய்ச்சினால், சீனிவாசன் கஞ்சா விற்பனை செய்வாராம்.. இவர்களை பற்றின தகவல் திரும்பவும் வாணியம்பாடி போலீசாருக்கு எட்டியது..

உடனடியாக மகேஸ்வரியை கைது செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், நேதாஜி நகரில் உள்ள மகேஸ்வரி வீட்டுக்கு தனிப்படை போலீஸார் சென்றனர்.. உள்ளே நுழைந்தால் லாரி டியூப்களில் கள்ளச்சாராயம், கஞ்சா பொட்டலம், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் போன்றவை இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்… அங்கிருந்த 3 பைக், சாராய பாக்கெட்கள், கஞ்சா பொட்டலங்கள், ரூ.20 லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ஆனால் மகேஸ்வரி அந்த வீட்டில் இல்லை!! ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் உள்ள சொந்தக்காரர்வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.. உடனே போலீசார் அந்த வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த மகேஸ்வரி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்..

முன்னதாக, கைது செய்ய வந்த பெண் போலீஸின் கையை மகேஸ்வரி முறித்ததாக கூறப்படுகிறது.. குடும்பத்தினருடன் சேர்ந்து அவரது கையை முறித்து தூக்கி வீசியிருக்கிறார். இதற்கு பிறகுதான் துப்பாக்கி முனையில் மகேஸ்வரி தம்பதி உட்பட 7 பேர் கைதாகினர். ஏற்கனவே ஒருமுறை கைது செய்ய முயன்றபோது ஒரு போலீஸ் அதிகாரியை கடித்துவிட்டு வீட்டுக்குள் போய் பூட்டிக் கொண்டவராம் மகேஸ்வரி.. இப்போது திரும்பவும் பெண் போலீஸின் கையை முறித்து விட்டுள்ளார். தற்போது 40 வீட்டு பத்திரங்கள் மகேஸ்வரியின் பெயரில் இருந்ததை கண்ட போலீசார் அவைகளையும் கைப்பற்றி உள்ளனர். அப்படியானால் மகேஸ்வரிக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கலாம் என யூகிக்கப்பட்டு அதன்படியும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

யாரெல்லாம் மகேஸ்வரியால் பாதிக்கப்பட்டுள்ளனரோ, அவர்கள் எல்லாம் தைரியமாக வந்து புகார் அளியுங்கள் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். எப்படியும் இனி மகேஸ்வரியை போலீஸார் ஸ்பெஷலாகவே கவனிக்கப்பார்கள் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *