தமிழகத்தில் ஆம்னி பேருந்து முன்பதிவு தொடக்கம்.. அரசு அனுமதிக்கும் முன்பே ஆயத்தம்?

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கத்திற்கான இணையவழி முன்பதிவு சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முறையாக அனுமதிக்கும் முன்பே இந்த முன்பதிவு தொடங்கபட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் ஊரடங்கு 4.0 நாடு முழுக்க கொண்டு வரப்பட்டது. நாடு முழுக்க இதனால் தளர்வுகள் பெரிய அளவில் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்திலும் மேற்கு மாவட்டங்கள் உட்பட 25 மாவட்டங்களில் பெரிய அளவில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த லாக்டவுன் 4.0ல் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து மாநில அரசுகளே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பேருந்து போக்குவரத்து தொடங்கி தனியார் போக்குவரத்து தொடர்பாகவும் மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கத்திற்கான இணையவழி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பிரபல ஆன்லைன் புக்கிங் தளங்களில் இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. ஜூன் 7 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு செல்ல பேருந்து புக்கிங் தொடங்கி உள்ளது. மேலும் பிற மாநிலங்களுக்கு செல்வதற்கான முன்பதிவினை ஆம்னி பேருந்துகள் தொடங்கியுள்ளது.

அரசு முறையாக அனுமதிக்கவில்லை

தமிழக அரசு முறையாக அனுமதிக்கும் முன்பே இந்த முன்பதிவு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு தற்போது பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பே முன்பதிவு தொடங்கி உள்ளது . பெரும்பாலும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் இந்த புக்கிங் முடிவை எடுத்துள்ளது.

ஆம்னி உரிமையாளர் சங்கம்

அரசு அனுமதி அளிக்காத நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு விரைவில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம் என்று ஆம்னி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது . ஜூன் 1ஆம் தேதிக்குள் அரசு அனுமதி அளித்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் புக்கிங் தொடங்கி உள்ளோம். அரசு அறிவித்த பின்னரே பேருந்துகளை இயக்குவோம். அதற்கு முன் இயக்க மாட்டோம். புக்கிங் என்பது முன்னேற்பாடான நடவடிக்கை என ஆம்னி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *