ராயபுரத்தில் பாதிப்பு 1500 ஐ நெருங்குகிறது.. சென்னையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,672 ஆக உயர்ந்துள்ளது

சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சென்னையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,672 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,931 பேர் குணமடைந்துள்ளனர். 57 பேர் உயிரிழந்துள்ளனர். 5,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாநிலங்களைச் சேர்ந்த 44 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராயபுரத்தில் 1,423 பேர், கோடம்பாக்கத்தில் 1,137 பேர், திருவிக நகரில் 900 பேர் தேனாம்பேட்டையில் 822 பேர், தண்டையார்பேட்டையில் 723 பேர், அண்ணாநகரில் 610 பேர், வளசரவாக்கத்தில் 544. பேர், அடையாரில் 413 பேர் , அம்பத்தூரில் 330 பேர், திருவொற்றியூரில் 182 பேர் மாதவரத்தில் 155 பேர், மணலியில் 100 பேர், சோழிங்கநல்லூரில் 109 பேர், பெருங்குடியில் 96 பேர், ஆலந்தூரில் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 60.40 சதவீதம் ஆண்கள், 39.58 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடசென்னைக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் இதுவரை 2,583 பேர், மத்திய சென்னைக்கு 5 மண்டலங்களில் இதுவரை 3,755 பேர், தென் சென்னைக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 1,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் வட்ட செயலாளர் பலி:

வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவை சேர்ந்த ராயபுரம் அதிமுக முன்னாள் வட்ட செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சரின் ஆதரவாளரான 48 வயது நபர் கொரோனா பாதிப்பால் வானகரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்றுவந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக பலியானார்.

நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டம் தொடக்கம்

ராயபுரம் மண்டலத்தில் பி.ஆர்.என். தோட்டப் பகுதியில் கொரோனா தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க நவீன ரோபோ வையும், மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்களை கொண்டு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ‘நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்ட’த்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றை தடுக்க அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 500 சுகாதார ஆய்வாளர்கள் வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 165 சுகாதார ஆய்வாளர்கள் ராயபுரம் மண்டலத்தில் பணிகளை தொடங்கியுள்ளனர். இவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்வார்கள். பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வைரஸ் தொற்று இருப்பின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

மேலும், அவர்களோடு தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்வார்கள். சென்னையில் மட்டும் சுமார் 85 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *