திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிகாலையில் திடீர் கைது

திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி அதிகாலையில் திடீரென கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ். பாரதியின் வீட்டுக்கு அதிகாலையில் சென்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது . அன்பகத்தில்ல் பேசிய அவரது உரையில், தாழ்த்தப்பட்டோருக்கு நீதிபதி பதவியிடங்கள் கிடைக்க திமுக காரணம் என கூறியிருந்தார். அப்போது சர்ச்சைக்குரிய ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்தியிருந்தார்.
ஆதித்தமிழர் மக்கள் பேரவை தலைவர் கல்யாண், கடந்த மார்ச் மாதம், காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
போலீசார் அழைத்துச் செல்லும் போது நிருபர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ‘பிப்ரவரி 15ம் தேதி நான் பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டது. அதற்காக இப்போது வந்து கைது செய்வது உள்நோக்கமுடையது. நான் சமீபத்தில் கொரோனா தடுப்புக்கான உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு இருந்ததை சுட்டிக் காட்டி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தேன். இதற்காகத்தான் நான் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக என்னை கைது செய்துள்ளார்கள். சீப்பை ஒழித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்த முடியாது. கொரோனா ஊழலுக்கு எதிராக புகார் அளிக்கப்படும். நான் வீட்டில் என்னை தனிமைப் படுத்திக் கொண்டிருந்தேன் . இந்த சூழ்நிலையில் என்னைக் கைது செய்துள்ளனர்.’ என்றார்.