வி.பி.துரைசாமி வித் எல்.முருகன்… சர்ச்சையை ஏற்படுத்திய சந்திப்பு…

திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, பாஜக மாநில தலைவர் எல்.முருகனை நேற்று சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் ராஜ்யசபா சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்த வி.பி.துரைசாமி பாஜகவில் இணைவதற்கான சமிஞ்கையா என பார்க்கபடுகிறது . இதனிடையே நேற்று முதல் வி.பி.துரைசாமி தனது அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்து உள்ளதாகவும், அவர் ஏதோ ஒரு முடிவுடன் தான் செயல்படுகிறார் என அறிவாலயத் தரப்பில் கூறப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த வி.பி.துரைசாமி கட்சியில் சீனியர் ஆவார். திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் துணை சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் அவர் திமுக மூலம் வகித்துள்ளார். கழக நிர்வாகிகளிடம் நன்கு பழக கூடியவர். அண்மைக்காலமாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வருகிறார்.

ராஜ்யசபா சீட்

இந்தமுறை தனக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் தன்னால் முடிந்தவரை அழுத்தம் கொடுத்தார். ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜை தேர்வு செய்தார் ஸ்டாலின். இந்நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்ற வி.பி.துரைசாமியின் கனவு நிறைவேறவில்லை. அப்போதே அவர் தனது அதிருப்தியை
வெளிப்படுத்த நினைத்திருக்கிறார். ஆனால் சீனியர்கள் சிலர் அவரிடம் சமாதானம் பேசி அமைதிப்படுத்தினார்.

நேரில் வாழ்த்து

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்றதற்காக அவரை சந்தித்து வி.பி.துரைசாமி வாழ்த்துக் கூறியதாக தெரிவிக்கப்பட்டாலும், முருகன் பொறுப்பேற்று மூன்று மாதம் கழித்து வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. முருகனும், வி.பி.துரைசாமியும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். இருவரும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர்கள். அந்த அடிப்படையில் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகமும், தொடர்பும் இருந்து வந்தது.

வி.பி.துரைசாமி என்ன முடிவெடுத்தாலும் சரி அதனை தடுக்கவேண்டாம் என முக்கிய நிர்வாகிகளிடம் கூறிவிட்டாராம் மு.க.ஸ்டாலின். முரசொலி நிலம் விவகாரத்தில் திமுகவின் இமேஜை சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கியவர் எல்.முருகன் என்பதை ஸ்டாலின் இன்னும் மறக்கவில்லையாம். இப்படிப்பட்ட நபரை தேடிச்சென்று சந்தித்து அதன் புகைப்படத்தை துரைசாமி வெளியிடுகிறார் என்றால் இதற்கு மேல் அவர் இங்கிருந்து என்ன பயன் எனக் கூறிவிட்டாராம் ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *